Sunday, June 13, 2021

இளையரசனேந்தல் ஜமீன் கதை

 இளையரசனேந்தல் ஜமீன் கதை 


குருவிகுளம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் விசுவாமித்திரன் அவர்களுடன் ஒரு சந்திப்பு!

(2015) மீள்பதிவு


அருணகிரி: 

அண்ணாச்சி வணக்கம். 

நீங்கள் இளையரசனேந்தல் ஜமீன் வழிதோன்றல்களுள் ஒருவர். 

கொடிவழித் தேடல் தொடர்பாக உங்களைச் சந்திக்க வந்தேன். 

ஜமீன் வரலாறு குறித்தும், கொடிவழி குறித்தும் சொல்லுங்கள்.


விசுவாமித்திரன்: 

இளையரசனேந்தல் ஜமீன்தார் சேது பாஸ்கர வெங்கடாசல அப்பாசாமி அவர்களுடைய மகள் வழிப் பேரன் நான். 

சேது பாஸ்கர அப்பாசாமியின் தாத்தா 

செவத்த துரைக்குக் குழந்தைகள் இல்லை. 

அவருடைய இரண்டு தம்பிகளுக்குத்தான் பிள்ளைகள். அவர்களுடைய கொடிவழிப் பிள்ளைகள்தாம் நாங்கள்.


இளையரசனேந்தல் ஜமீன்தார் எல்லோருமே ‘அப்பாசாமி’ என்றுதான் அழைக்கப்படுவார்கள். அவர்களுடைய முன்பெயர்கள் மட்டும் 

ஆர்.வி.கே. அப்பாசாமி, ஆர்.எம். அப்பாசாமி, 

ஆர்.வி.ஆர். அப்பாசாமி என மாறி வரும்.


அருணகிரி: 

இளையரசனேந்தல் ஜமீன் எப்படி உருவாயிற்று?


விசுவாமித்திரன்: 

திருமலை நாயக்கர் காலத்தில் எங்கள் முன்னோருக்கு இந்தக் கிராமங்களை வழங்கி இருக்கின்றார்கள். இதுதான் அவர் வழங்கிய செப்புப் பட்டயம். 


(பட்டயங்களைக் காண்பித்தார். படம் உள்ளது.)


தலைவர் வைகோ அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வருகை தந்தபோது இந்தப் பட்டயத்தை அவர்களிடம் காண்பித்தேன்.   

தமிழில்தான் பொறித்து இருக்கின்றார்கள். எழுத்துகளின் மீது சாக்பீஸ் தடவி என்ன எழுதி இருக்கின்றார்கள் என்பதைப் படித்துப் பார்த்தேன். 

சில சொற்களின் பொருள் எனக்கு விளங்கவில்லை. யாரேனும் கல்வெட்டு எழுத்துகளைப் படிக்கின்ற ஒருவரிடம் கொடுத்து விளக்கம் கேட்க வேண்டும் என்று கருதுகின்றேன்.


விசுவாமித்திரன் அவர்களுடைய துணைவியார்: 


வாசுதேவநல்லூர் அருகே தலையணையில் நடந்த சண்டைக்காக ஆர்க்காடு நவாப் எங்களுடைய இரண்டு தாத்தாக்களை வேலூரில் இருந்து அழைத்துக் கொண்டு வந்தார். 

இப்போது வேலூர் சிறை இருக்கின்ற இடத்தில்தான் அவர்கள் அப்போது வசித்து இருக்கின்றார்கள். 


தலையணைப் போரில் வெற்றி பெற்றதற்காக வாசுதேவநல்லூர் அருகே 1000 ஏக்கர் விதைப்பாடு நிலத்தை ஆர்க்காடு நவாப் கொடையாகத் தந்தார். 


அந்த இடத்தையும் அவர்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளச் சொல்லி இருக்கின்றார். 

எந்த இடத்தில் கோட்டை கட்டுவது என்பதற்காக ஆய்வு செய்து கொண்டே வந்தபோது இளையரசனேந்தலில்தான் மண்ணும் தண்ணீரும் சம எடையில் இருந்ததாம். 

அதனால் இந்த இடத்தைத் தேர்வு செய்து கோட்டை கட்டி இருக்கின்றார்கள். 

இது உறுதியான இடம்.


அருணகிரி: ஜமீன்தார் என்ற பட்டம் எப்படி வந்தது?


விசுவாமித்திரன்: வெள்ளைக்காரர்கள் காலத்தில்தான் அந்தப் பெயர் வந்தது.


அருணகிரி: இந்த ஜமீனில் படைகள் இருந்தனவா?


விசுவாமித்திரன்: 

இல்லை. படைகள் கிடையாது. 

திருமலை நாயக்கருக்கு வரி வசூல் செய்து கொடுக்கின்ற பணி மட்டும்தான். 

பின்னாட்களில் ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதிகளைக் கைப்பற்றியபோது எங்கள் ஜமீனுக்கு வந்து 

இனிமேல் நீங்கள் வரி வசூலை எங்களிடம்தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.


அருணகிரி: 

இந்தப் படம் (ஜமீன்தார்) திருநெல்வேலி ஏ.ஜே. போஸ் ஸ்டுடியோவில், 1912 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு இருக்கின்றது. 

அந்தக் காலத்தில் இங்கிருந்து 

திருநெல்வேலிக்கு எப்படிச் சென்றார்கள்?


விசுவாமித்திரன்: 

குதிரையில்தான் போனார். 

வாசுதேவநல்லூர் விவசாய நிலங்களைப் பார்ப்பதற்காக வாரம் ஒருமுறை இளையரசனேந்தலில் இருந்து குதிரையில் போவார். 

மற்ற எங்கள் குடும்பத்தினர் வில்லு வண்டியில் போவார்கள். 

நான்கு குதிரைகள் பாதுகாப்பாகச் செல்லும். 

குருவிகுளத்தில் உள்ள சம்பந்தி வீட்டுக்கும் குதிரையில்தான் வருவார். 

வேட்டைக்கும் போவார். துப்பாக்கி சுடுவதில் கெட்டிக்காரர்.  


ஒருமுறை மலைப்பாம்பிடம் மாட்டிக் கொண்டாராம். அப்போதும் மறுகையில் இருந்த துப்பாக்கியால் பாம்பைச் சுட்டுக் கொன்றாராம். 

அவ்வளவு துணிச்சல்காரர். 

அவரைப் பார்த்தாலே பயப்படுவார்கள். 

ஆனால் தர்ம சிந்தனை உள்ளவர். 

நிறைய தான தருமங்கள் செய்து இருக்கின்றார்.


ஒருமுறை குடித்து விட்டு வேகமாகக் குதிரையில் வரும்போது புளியங்குளத்தை அடுத்த ஐய்யனார் கோவில் அருகில் விழுந்து விட்டார்.  

பலத்த உள்காயம். 


கும்பகோணத்தில் ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். 

ஓரளவுக்குக் குணமாகித் திரும்பி வந்தார். ஆனாலும் சரியாக நடக்க முடியவில்லை. 

சிலகாலம் அரண்மனையிலேயே இருந்தார். 

32 வயதிலேயே இறந்து போனார்.


அருணகிரி: 

இளையரசனேந்தல் ஜமீன் கிராமங்கள் யாவை?


விசுவாமித்திரன்

சித்திரம்பட்டி, புளியங்குளம், அய்யனேரி, ஆண்டிபட்டி, கொம்மங்குளம், இளையரசனேந்தல், வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, தேவர்குளம், பிள்ளையார் நத்தம், தர்மத்துப்பட்டி, குளக்கட்டாகுறிச்சி,ரெட்டியபட்டி, முத்துகிருஷ்ணாபுரம், கஸ்தூரி ரங்காபுரம், வரகனூர் வரையிலான கிராமங்கள்.


அருணகிரி: 

இப்போது நீங்கள் வசிக்கின்ற குளக்கட்டாகுறிச்சி வீடு எப்போது கட்டப்பட்டது?


விசுவாமித்திரன்: 1920 களில் கட்டப்பட்டது. பாறைப்பட்டி, நாகம்பட்டி, முத்தால்நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களிலும் இதேபோன்ற வீடுகள் உள்ளன.


என்னுடைய தந்தையார் இந்தப் பகுதியில் ஒரு பண்ணையார். 

இவர்களது குடும்பத்தார் இந்தப் பகுதியில் உள்ள எட்டுக் கிராமங்களில் கிஸ்தி வரிவசூல் செய்து இளையரசனேந்தல் ஜமீன்தாரிடம் கொடுப்பார்கள். இவர்களை ‘ஜூரி’ என்பார்கள்.


அருணகிரி: 

வரி வசூலை எந்த முறையில் தீர்மானிப்பார்கள்? 

ஒரு ஏக்கருக்கு இவ்வளவு என்ற கணக்கா? அல்லது ஓராண்டுக்கு ஒரு தொகை, அல்லது விளைச்சலில் ஒரு பங்கு என்ற கணக்கா?


விசுவாமித்திரன்: 

விளைச்சலில் பங்கு என்பது இல்லை. 

அது விவசாயிகளை நேரடியாகப் பாதிக்கும். 

இன்றைய நாள்களில் வருவாய்த் துறையினர் ஒரு ஏக்கருக்கு இவ்வளவு தொகை என்று வசூலிப்பது போலத்தான் அந்நாள்களிலும் வசூலித்து இருக்கின்றார்கள்.


அருணகிரி: என்ன அளவு பணம்?


விசுவாமித்திரன்: 

அரையணா, முக்காத் துட்டு, ஒரு அணா என்ற கணக்குத்தான். அப்படிக் காசுகள் கூட எங்களிடம் இருந்தன. இப்போது இல்லை.


அருணகிரி: 

வெள்ளை அரசாங்கத்துக்கு இந்த வரியை எப்படி ஒப்படைத்தார்கள்?


விசுவாமித்திரன்: கோவில்பட்டி கிருஷ்ணன் கோவிலுக்கு அருகில் நான்கு ஐந்து கட்டடங்கள் உள்ளன.  

ஜமீன்தார் செவத்த துரை காலத்தில் கட்டப்பட்டவை. சத்திரம் என்று சொல்லுவார்கள். ஆண்டுக்கு ஒருமுறை அங்கே வெள்ளைக்காரத் துரைகள் வருவார்கள். அவர்களிடம் கொண்டு போய்க் கொடுக்க வேண்டும். 


அவர்கள் இந்தப் பகுதிக்கு வந்தபோது 

ஜமீன் கிராமங்களை இரண்டாகப் பிரித்தார்கள். 

ஒன்று குருவிகுளம் ஒரு ஜமீன். 

மற்றொன்று இளையரசனேந்தல் ஜமீன் ஆனது.


அருணகிரி: 

இளையரசனேந்தல் ஜமீன் கட்டடம் இப்போது எப்படி இருக்கின்றது? பார்க்கலாமா?


விசுவாமித்திரன்: நான் அழைத்துச் செல்கிறேன். 


(குளக்கட்டாகுறிச்சியில் இருந்து இளையரசனேந்தல் சென்று இடத்தைப் பார்வை இட்டோம். படங்கள் எடுத்துக் கொண்டேன்).


இந்த மாளிகை கட்டி 350 ஆண்டுகள் ஆகின்றன. கட்டியவர் பெயர் தெரியவில்லை. 

மேற்கூரை மட்டும்தான் விழுந்து விட்டதே தவிர, சுற்றுச் சுவர்கள் எல்லாம் இன்னமும் அப்படியேதான் நிற்கின்றன. அந்தக் காலத்தில் அவ்வளவு வலிமையாகக் கட்டி இருக்கின்றார்கள்.


இந்த அரண்மனையில் மாமா மற்றும் அவருடைய இரு மனைவியர், அம்மா, பிள்ளைகள் நாங்கள் எல்லோருமே இந்த வீட்டில்தான் இருந்தோம்.  

இந்த இடத்தில் ஒரு பெரிய அரங்கம் இருந்தது. 

சுற்றி ஆட்கள் உட்கார்ந்து கொள்ளலாம். 


நடுவில் மாப்பிள்ளை, பெண் உட்கார ஒரு தேக்கு மர நாற்காலி இருந்தது. ஜமீன் குடும்பத்துத் திருமணங்கள் அனைத்தும் இந்த வீட்டில்தான் நடைபெற்றன. 

கிழக்கில் இருக்கின்ற கட்டடத்தில்தான் தர்பார் ஹால் இருந்தது. 

சுற்று வட்டாரத்தில் இருந்து வருகின்ற வரி வசூல் எல்லாம் அந்தக் கட்டடத்தில்தான் கொண்டு வந்து கொடுப்பார்கள். 


எங்கள் மாமா காலத்திற்குப் பிறகு கட்டடம் பராமரிப்பு இன்றிப் பாழடைந்து விட்டது. மேற்கூரை எல்லாம் விழுந்து விட்டது. இப்போது சுவர்கள் மட்டுமே இருக்கின்றன. 

இந்த இடத்தையும் கூட விற்று விட்டார்கள். தஞ்சாவூரைச் சேர்ந்த சிலர் வாங்கி இருக்கின்றார்கள்.


அருணகிரி: தஞ்சாவூர்க்காரர்கள் இளையரசனேந்தல் கிராமத்தில் இடம் வாங்கி இருக்கின்றார்களா?


விசுவாமித்திரன்: 

ஆம்; அது மட்டும் அல்ல; இந்தச் சுற்று வட்டாரத்தில் சுமார் 1200 ஏக்கர் வரையிலும் அவர்கள் வாங்கி இருக்கின்றார்கள். 

1996 வரையிலும் இளையரசனேந்தல் ஜமீன் வீட்டில் இருந்த நான்,  

1996 இல் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தில் இணைந்ததற்குப் பிறகு, குளக்கட்டாகுறிச்சிக்கு வந்து விட்டேன். 

அதனால், யார் யார் அந்த இடங்களை வாங்கி இருக்கின்றார்கள் என்ற பெயர் விவரம் எனக்குத் தெரியாது. ஆனால் வாங்கி இருக்கின்றார்கள்.


அருணகிரி: 

இளையரசனேந்தல் ஜமீனில் யாருக்கு யார் வழித்தோன்றல்கள் என்ற கொடிவழிப் பட்டியல் இருக்கின்றதா?


விசுவாமித்திரன்: 

இதுவரை எழுதி வைக்கவில்லை. இனிமேல்தான் உருவாக்க வேண்டும்.


எங்கள் தாத்தா சேது பாஸ்கர வெங்கடாசல அப்பாசாமிக்கு (ஜமீன்தார்) இரண்டு தாரம்.


மூத்த மனைவிக்கு இரண்டு பையன்கள். 

ஆர்.எஸ். அப்பாசாமி, ஆர்.வி.என். அப்பாசாமி.


ஆர்.எஸ். அப்பாசாமி பிள்ளைகள்: 

சாய்ராம், ராஜ்குமார், மோகன், கிருஷ்ணாராம் உட்பட 8 ஆண்கள்.  

காசிப்பாண்டி, இராஜேஸ்வரி என இரண்டு பெண்கள். கோவில்பட்டி, வாசுதேவநல்லூரில் வசித்து வருகின்றார்கள். 


ஜமீன்தார் செவத்ததுரை காலத்தில் கோவில்பட்டியில் கட்டப்பட்ட கிருஷ்ணன் கோவில் பரம்பரை அறங்காவலர்களாகப் பொறுப்பு வகித்து வருகின்றார்கள். 

வாசுதேவநல்லூரில் உள்ள நிலபுலன்களைப் பராமரித்து வருகின்றார்கள்.


எங்கள் தாத்தாவின் இரண்டாவது மனைவிக்கு 

ஒரு ஆண். முத்தால நரசிம்ம அப்பாசாமி, ராஜலெட்சுமி  ஒரு பெண். (எங்கள் தாயார்).


மாமாக்கள் ஆர்.வி.என். அப்பாசாமி, முத்தால நரசிம்ம அப்பாசாமி ஆகியோருக்குக் குழந்தைகள் இல்லை.


எங்கள் தாத்தா ஜமீன்தாரின் தம்பி வெங்கடசால அப்பாசாமி-நவநீதம் அம்மாள் ஆகியோருக்கு,  கோவில்பட்டி இலக்குமி நூற்பு ஆலையின் மேலாளராகப் பொறுப்பு வகித்த செல்வராஜ், இராஜஇராஜேஸ்வரி என இரண்டு பிள்ளைகள். இராஜேஸ்வரியை கோவை பிரிமியர் நூற்பு ஆலை தாமோதரசாமி குழுமத்தில் திருமணம் செய்து கொடுத்து இருக்கின்றார்கள். 

அந்த அம்மையார் இயற்கை எய்தி விட்டார். அவருக்கு சரத் சந்திரன், இராஜேந்திரன், செல்வராஜ் ஆகிய மூன்று மகன்கள் இருக்கின்றார்கள்.


ஜமீன் குடும்பத்தில் பாகப்பிரிவினை பிரச்சினை ஏற்பட்டபோது, எட்டயபுரம் எட்டப்ப மன்னர்  தலையிட்டு இரண்டு பாகங்களாகப் பிரித்துக் கொடுத்தார்கள். 


நடுவப்பட்டி, கஸ்தூரி ரங்காபுரம், முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் முதல் தொகுதி என்றும், 


தேவர்குளம், பிள்ளையார்நத்தம், முத்துகிருஷ்ணாபுரம், தோப்புரெட்டிபட்டி, குளக்கட்டாகுறிச்சி இவையெல்லாம் இரண்டாம் பகுதி என்றும் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.


முதல் தொகுதி, செல்வராஜ்  வகையறாவுக்கும்,  இரண்டாம் தொகுதி எங்களுக்கும் கிடைத்தது.


எங்கள் தாய்மாமா முத்தால நரசிம்ம அப்பாசாமிக்குப் பிள்ளைகள் இல்லை. 

எனவே, எங்களைத்தான் பிள்ளைகளாக வளர்த்தார்கள். நாங்கள் எல்லோருமே இளையரசனேந்தல் ஜமீன் வீட்டில்தான் வளர்ந்தோம். 

எனவே, குளக்கட்டாகுறிச்சியை விட இளையரசனேந்தல் சுற்று வட்டாரக் கிராமங்களில்தான் எங்களை அனைவருக்கும் தெரியும்.


அருணகிரி: உங்களுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்?


விசுவாமித்திரன்: 

நாங்கள் பத்துப் பேர். ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள். ஒரு அக்கா பக்கத்தில் இராமலிங்காபுரத்தில் இருக்கின்றார்கள். 

இருவர் கோவில்பட்டி, கடலையூர்; ஒருவர் கோவை; ஒருவர் அமெரிக்கா. 


எனது ஒரு அண்ணனும் தம்பியும் இளையரசனேந்தல்; நாங்கள் மூன்று பேர் இங்கே குளக்கட்டாகுறிச்சியில் இருக்கின்றோம்.


பதிவு

அருணகிரி

9444 39 39 03

(2015)

மீள்பதிவு

12.06.2021

Facebook & YouTube id

Arunagiri Sankarankovil

No comments:

Post a Comment